Monday, November 5, 2012

இட ஒதுக்கீடும் பர்த்டே பார்ட்டியும்!!

என்ன ஒரு தலைப்பு!!..

அது என்னனங்க போன வாரம் ஒரு பர்த்டே பார்ட்டிக்கு கூப்பிட்டாங்கன்னு போயிட்டோம்..அது ஏன் போனோம்னு நானும் ரங்கமணியும் தலையில முட்டிக்காத குறை தான்.

ஒரு இந்திய தமிழ் குழந்தையின் பார்ட்டி அது. அந்த குழந்தையின் பெற்றோர் எங்களுக்கு அதிக பரிச்சயமில்லாதவர்கள் என்றாலும், முகுந்த் உடன் படிக்கும் பையன் பார்ட்டி என்பதால் அங்கு சென்றோம்.


அந்த பர்த்டே பார்ட்டியில ஒரு குறிப்பிட்ட சாதி வகுப்பை சேர்ந்த பலரும் சில அமெரிக்கர்களையும், சில வேறு சாதி மக்களையும் அந்த குழந்தையின் பெற்றோர் அழைத்திருந்தார்கள். அவர்கள் வீட்டில் நடத்தப்பட்டது அந்த பார்ட்டி.

அங்கு வந்திருந்த பலர் இந்தியாவில் நடக்கும் இட ஒதுக்கீடு பற்றியும், அது எப்படிப்பட்ட முட்டாள்தனம் என்பது போன்று பேசிக்கொண்டு இருந்தனர். எப்போதும், இப்படி நடக்கும் டிஸ்கஸன்களில் நமக்கு ஏன் வம்பு என்று பேசாமல் இருந்து விடுவேன். எல்லாரும் வாய் கிழிய தமிழில் பேசிய பிறகு..கேக் வெட்டும் நேரம் வந்தது..பிறகு எல்லாரும் சாப்பிட வாங்க என்று அந்த பெற்றோர் அழைத்தனர்.  நாங்கள் எல்லரும் தட்டை எடுத்து கொண்டு புஃபேக்கு சென்று வரிசையில் நிற்க..அந்த குறிப்பிட்ட சாதி மக்கள் மட்டும் அவர்களின் டைனிங் டேபிளில் உட்கார்த்திருக்க..அவர்களுக்கு என்று தனி சாப்பாடு பரிமாறப்பட்டது.

எங்களை போன்ற சில குடும்பங்களுக்கு அமெரிக்கர்கள் உட்பட வேறு சாப்பாடு வைத்து இருந்தனர். அதில் ஒரு அமெரிக்க அம்மா..அது என்ன சாப்பாடு என்று கேட்க..அதற்கு அந்த பர்த்டே பார்ட்டி அம்மா, ”அது கடவுளுக்கு படைத்தது..வேறு மக்கள் சாப்பிட கூடாது” என்று கூறினார்.

அட..இது நல்லா இருக்கே..அப்படி கடவுளுக்கு படைத்த சாப்பாட்டை வேறு சாதி மக்கள் சாப்பிட கூடாது என்று சொல்பவர்கள்..எதற்கு மற்ற மக்களை பார்ட்டி என்று அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை..

அதே போல சாப்பிட்ட பிறகு கை கழுவ என்று மற்ற சாதி மக்களுக்கு தனி இடம் என்று வைத்து இருந்தது கண்டு..அட அட என்ன அழகா நமக்கு இவங்க இடம் ஒதுக்கி இருக்காங்கப்பா என்று எனக்கு மலைப்பாக இருந்தது.

அவர்கள் சிறிது நேரத்துக்கு முன்பு வரை “இட ஒதுக்கீடு” பற்றி பேசிய பேச்சுக்கும் அவர்கள் எங்களுக்கு கொடுத்த “இட ஒதுக்கீடு” பற்றியும் நினைத்து ”அட நாம அமெரிக்காவில தான இருக்கோம்” கிள்ளி பார்த்து கொண்டு அந்த இடத்தை விட்டு விட்டால் போதும் என்று காலி செய்தோம்.