Monday, October 12, 2015

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்!!

 கடந்த வருடங்களை நினைத்து, கடந்து வந்த பாதைகளை நான் அசை போடும் போது ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் ".  எத்தனை அருமையான பாடல் இது.


.நான் +12 முடித்தசமயம் எப்படியாவது இன்ஜினியரிங் சேர்ந்து விட வேண்டும் என்று அப்படி ஒரு ஆசை எனக்கு. ஆனால் சீட் கிடைக்கவில்லை. என் உடன் படித்த பலரும் காசு கொடுத்து கல்லூரியில் சேர்ந்த பிறகு என்னிடம் கல்லூரி இப்படி இருக்கும் அப்படி இருக்கும் என்று வந்து சொல்லும் போது எனக்கு ஒரே அழுகை அழுகையாக வரும். எனக்கு மட்டும் என் கிடைகல சீட் என்று அழுவேன். எனக்கு மட்டுமே என் இப்படி நடக்கிறது என்று அழுகை தினமும்.

நெடுநாளைக்கு பிறகு அதே தோழிகள் சிலரிடம் பேச நேர்ந்தது. அதில் முக்கால் வாசி பேர் தற்போது படித்த கல்லூரியில் பேராசிரியை ஆக இருப்பதாகவும் ஒரு சிலர் வேலை எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார்.  இன்ஜினியரிங் சேராதது எவ்வளவு நன்மை என்று நினைத்து கொண்டேன்.

 இன்னொரு நிகழ்வு, சில வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த வேலை அது, எனக்கு மனதுக்கு மிகவும் பிடித்த வேலை. ஹெல்த் கேர் பீல்ட் என்பதால் மக்களுக்கு சேவை செய்ய மறைமுக வாய்ப்பு என்று நினைத்து சந்தோசப்பட்டேன். ஆனால் உள்ளே அரசியல் தாங்க முடியவில்லை. இந்தியாவில் வேலையில் நடக்கும் அரசியல் எல்லாம் ஒன்றும் இல்லை என்னும் அளவு இருந்தது . ஒருவரை ஒருவர் காலை வாரி விட்டு கொண்டு, ஒருவர் கீழே விழுந்தால் சந்தோஷ பட்டு கொண்டு, வெளியே நன்றாக நடித்து கொண்டு உள்ளே அத்தனை வஞ்சமும் வைத்து அரசியல் செய்த மக்களை பார்த்து நொந்து போய் வேறு வழி இல்லாமல் வேலை விட்டு வர வேண்டிய நிலை. உள்ளே அப்படி ஒரு வலி. இன்னும் நினைத்தால் மனது வலிக்கும்.

ஆனால் என்னுடன் அங்கு வேலை பார்த்த ஒருவரிடம் கடந்த வாரம் பேச நேர்ந்தது. அவர் சொன்னது," நீங்கள் வெளியே வந்த நேரம் தான் சரியான நேரம், அதற்க்கு பிறகு அந்த ப்ராஜெக்ட் மூடி விட்டார்கள் அதில் வேலை செய்த பலரும் வேலை இழந்து விட்டனர்" என்றனர். அட கடவுளே, என்ன விளையாட்டு இது என்று நினைக்க தோன்றுகிறது.

அதே போல, என்னுடன் எப்பொழுதோ வேலை பார்த்த ஒருவர் தற்போது வேறு நாட்டில் பேராசிரியர் ஆக இருக்கிறார். அவருடன் நான் செய்த ப்ராஜெக்ட்டை  (நானே மறந்து போன ஒன்று) பப்ளிஷ் செய்து இருக்கிறார், என்னையும் ஒரு சக ஆசிரியர் ஆக அந்த ஆர்டிகளில் பார்த்த போது, "அட, நான் எப்பொழுதோ செய்த ஒரு உதவிக்கு , அவர்கள் நமக்கு நன்றி கடன் செய்கிறார்களே "என்று ஆச்சரிய பட தோன்றியது.

என் அம்மா ஒன்று சொல்லுவார்கள், "என்ன தான் உருண்டு பிரண்டாலும்  ஓட்டுற மண்ணு தான் ஓட்டும்" என்று. அதாவது உங்களுக்கு என்று சில விசயங்கள் விதிக்கப்பட்டு இருந்தால் அவை எப்படியும் உங்களை வந்து சேரும். உங்களுகென்று விதிக்கபடாத சில நீங்கள் எவ்வளவு விரும்பி சென்றாலும் அல்லது முயற்சி செய்தாலும் கிடைக்காது.
அதில் எதோ காரணம் இருக்கும் ஆனால் என்னவென்று அப்பொழுது புரியாது ஆனால் நடக்கும் எல்லாவற்றுக்கும் எதோ ஒரு காரணம் இருக்கிறது. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று எண்ணம் வந்து விட்டால் ஏமாற்றம் வரும் போது தாங்கி கொள்ள முடியும் .



"நீ  வேண்டுவதை கடவுள்/இயற்க்கை கொடுப்பதில்லை, மாறாக உனக்கு தேவையானதை அவர் தர மறப்பதில்லை. "

எத்தனை உண்மையான வார்த்தைகள் இவை. ஏன் கிடைக்கவில்லை என்று அலுத்து, அழுது புலம்பி ஆர்பரிப்பதை விட, நமக்கு தேவையானது எப்படியாவது நம்மிடம் வந்து சேரும் என்று அமைதியாக இருப்பது சிறந்தது என்று புரிகிறது. திரும்ப ஒருமுறை பாட்டை பாடி பார்கிறேன். "நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை,  நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை"

நன்றி.



7 comments:

ப.கந்தசாமி said...

அருமையான வாழ்க்கைத் தத்துவம். இதுவே மனதிற்கு அமைதி தரும்.

Jayakumar Chandrasekaran said...

என்னதான் திட்டம் போட்டு வாழ்ந்தாலும் திட்டங்கள் அடிக்கடி மாறி வேறு திசையில் செல்வது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. உதாரணமாக படித்த படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லாமல் எத்தனையோ பேர். நினைப்பது எல்லாம் நடப்பது இல்லை. விருப்பங்கள் எல்லாம் நிறைவேறுவது இல்லை.

--
Jayakumar

Anuprem said...

உங்களுக்கு என்று சில விசயங்கள் விதிக்கப்பட்டு இருந்தால் அவை எப்படியும் உங்களை வந்து சேரும். உங்களுகென்று விதிக்கபடாத சில நீங்கள் எவ்வளவு விரும்பி சென்றாலும் அல்லது முயற்சி செய்தாலும் கிடைக்காது......

உண்மை...

Avargal Unmaigal said...

///"நீ வேண்டுவதை கடவுள்/இயற்க்கை கொடுப்பதில்லை, மாறாக உனக்கு தேவையானதை அவர் தர மறப்பதில்லை.//

மிக மிக சரி........(கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும்)

Avargal Unmaigal said...

நான் ப்ள்ஸ்டு படித்து கொண்டிருக்கும் சமயத்தில் எனது பெரியப்பா சென்னையில் உள்ள மிக சிறந்த எஞ்சினியரிங்க் காலேஜில் போர்ட்டு டைரக்டர் வீட்டிற்கு வந்து இருந்தார் அப்போது அவர் சொன்னார் நீ விரும்பினால் உனக்கு என் காலேஜில் சீட்டு வாங்கி தருகிறேன் என்றார் அதற்கு நான் உங்களால் முடியாது என்றேன் அதற்கு அவர் எனக்கு என்று 2 சீட்டுகள் உண்டு அதை நான் விரும்பியவர்களுக்கு கொடுக்கலாம் அதனால் மார்க் எல்லாம் பற்றி கவலைப்படாதே என்றார். நான் மீண்டும் உங்களால் முடியவே முடியாது என்று சொன்னேன். காரணம் நான் ப்ள்ஸ்டுவில் எடுத்திருப்பது எக்னாமிக்ஸ் என்று சொல்லி சிரித்தேன்

ஜோதிஜி said...

பலதரப்பட்ட மனிதர்கள், அவர்களின் ஏற்றம் இறக்கம், வெற்றி தோல்விகளைப் பார்த்த பின்பு எனக்கும் நீங்க சொன்னது தான் சரியாகப் படுகின்றது. ஆனால் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற நம்பிக்கையும் உடன் வந்து கொண்டே இருக்கின்றது.

தி.தமிழ் இளங்கோ said...

எனக்கும் பிடித்த பாடல். உங்கள் அனுபவங்களை சுருக்கமாகவும் புரியும்படியும் மேற்கோள் செய்து இருக்கிறீர்கள். (”எங்கே வாழ்க்கை தொடங்கும். அது எங்கே எவ்விதம் முடியும்? இதுதான் வாழ்க்கை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது”. – கவிஞர் கண்ணதாசன்.